தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக-தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், கடுமையான அதிகாரப் பசியில் அக்கட்சியினர் உள்ளனர். தப்பித் தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களின் சொத்துகள் காணாமல் போய்விடும்.
நிச்சயமாக உங்கள் சொத்துகளுக்கு இரண்டு ஆவணங்கள் தயாராகிவிடும். எடப்பாடி பழனிசாமி கஜானாவை காலி செய்து, வழித்து சானிடைசர் போட்டு வைத்துவிட்டார். மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகித்த பதவியில் பழனிசாமி அமர்ந்து கொண்டு, எல்லோரையும் கண்டபடி பேசி வருகிறார்.
மக்கள் உஷாராக இருக்க வேண்டும். பாமகவிலிருந்து வந்த அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித் துறையை ஊழல் துறையாக மாற்றிவிட்டார். பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம், கடன் வாங்க வங்கிக்கு செல்லாமல் தற்போது தேர்தலுக்கு அமைச்சர்களின் தொகுதியில் சுமார் 200 கோடி வரை செலவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். மக்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், உங்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் மீண்டும் உங்களிடமே வருகிறது. பணத்தை வாங்கி கொண்டு, ’மந்திரியே எந்திரி’ என்று சொல்லி விரட்டுங்கள்" என்று தெரிவித்தார்.