தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான உள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் நான்கு இடத்தில் தேன் பூச்சிகள் கூடுகட்டி உள்ளன. பல ஆண்டுகளாக இருந்த தேன்கூடை மருத்துவமனை நிர்வாகம் அகற்றுவதற்காக, தேனி அகற்றுவதில் பயிற்சிபெற்ற ஆட்களை வரவழைத்து இருந்தது.
பின்னர் அங்கு இருந்த 4 தேன்கூட்டை, தேன் எடுப்பவர்கள் கலைத்தனர். அப்போது நான்கு தேன்கூட்டிலிருந்து வெளியேறிய தேனீக்கள் மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்களை துரத்தி துரத்திக் கடித்தது. மருத்துவமனை வளாகம் முழுவதுமாக தேனீக்கள் சத்தமிட்டுக் கொண்டு சுற்றியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் ஏராளமான பொதுமக்களை தேனீக்கள் கொட்டியது. தொடர்ந்து, இதனால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டனர். ஒரு சிலர் சிகிச்சை எடுக்காமலேயே வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். இதனால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.