கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக 70 நாட்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு செல்லும் பகுதியில் மடம் என்னும் இடத்தில் உள்ள சோதனைச்சாவடி, வனத்துறை சோதனைச்சாவடியை கடந்து சிலர் ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் விடுமுறை தினமான இன்று, மூன்று வாகனங்களில் வந்த குழுவினர் ஒகேனக்கல் மெயின் அருவியில் குடும்பத்தோடு குளித்தனர். பெண்ணாகரம், ஒகேனக்கல் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்தும் சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்து மெயின் அருவியில் குளித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை விதித்தும் அதை முறையாக தடுக்காத அலுவலர்களின் அலட்சிய போக்கால் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.