தர்மபுரி: கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி நீருக்கு, தமிழ்நாட்டில் நுழைவிடமாக இருக்கும் ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் ஆகும்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, சீனி அருவிகளில் குளித்தும்; பரிசலில் பயணம் செய்தும் சுற்றுலாவைக் கொண்டாடுவது வழக்கம். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் இன்று (ஜூலை 7) சுற்றுலா பண்பாட்டு மற்றும் அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன் தலைமையிலான குழுவினர், பரிசல் வாயிலாகப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஒகேனக்கல் பிரதான அருவி, பரிசல் துறை, சிறுவர் பூங்கா, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக விடுதி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
பின் அப்பகுதியில் கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பரிசல் ஓட்டிகள், சமைப்பவர்கள், மசாஜ் தொழிலாளர்கள் போன்றோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
மேலும் இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, சுற்றுலா கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தர்மபுரி கூடுதல் ஆட்சியர் வைத்தியநாதன், உதவி ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ரயிலில் சிக்கியவரை மீட்ட பெண் காவலர்கள்: வைரல் வீடியோ!