தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் கிராமத்தில் காவிரி ஆற்றின் அருவியானது தென்னகத்தின் நையகரா என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சுற்றுலா தளத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக கோடைக்காலத்தில் ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்து மகிழ்வது, ஆயில் மசாஜ், படகு சவாரி, முதலைப் பண்ணை, சினி அருவி உள்ளிட்ட இடங்களை பார்த்து மகிழ்வார்கள். அருவியில் குளிப்பதை போல காவிரி ஆற்றில் படகு சவாரி செய்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகின்றனர். மணல் திட்டு, சினி பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசல் இயக்கப்படுகிறது.
பரிசல் சவாரியை நம்பியை நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படுவதை போன்று தங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பரிசல் ஓட்டிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சுற்றுலா பயணிகளிடம் பரிசல் ஓட்டிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், சுற்றுலா பயணிகள் சிலர் பரிசல் ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்கின்றனர். அதோடு, "அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் கேட்கின்றனர்" என்று கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
பரிசல் ஒன்றுக்கு ஒருமுறை இயக்க உயிர்காக்கும் ஜாக்கெட், ஓட்டுநர் கூலி உள்ளிட்டவைகளுடன் 750 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பரிசல் ஓட்டிகள் சிலர் மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை கேட்பதாக புகார் கூறும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள கழிவறையில் நபர் ஒருவருக்கு 10 ரூபாய் கேட்பதாகவும், கழிவறை சுத்தமாக இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் செய்த வீடியே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஞாயிறு விடுமுறை - ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!