தர்மபுரி: தொப்பூரிலிருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் வரையிலான சாலை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத அளவில் குண்டும் குழியுமாக இருந்தது. இதன் காரணமாக நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
சாலைகள் ஆய்வு
சாலையை புதுப்பிக்கக் கோரி மேட்டூர் பகுதி பொதுமக்கள், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, அந்த சாலையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இச்சாலையை சீரமைப்பதில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் இடையே கருத்து முரண்பாடு இருந்ததை கண்டறிந்தார்.
மத்திய அமைச்சரிடம் ஆலோசனை
இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகு, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தொப்பூர் முதல் மேச்சேரி சாலை அமைக்கும் பணியை செந்தில்குமார் இன்று துவங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே சாலையை பயன்படுத்தி வருவதால் நான்கு வழிச்சாலையாக மாற்ற முடியாது என்றும், 20 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் பயணம் செய்தால் மட்டுமே நான்கு வழிச்சாலையாக மாற்ற முடியும் என அலுவலர்கள் தெரிவித்தாக விளக்கமளித்தார்.
கேரளா முதல் பெங்களூர் வரை
சாலையை விரிவாக்கம் செய்தால் பவானி வழியாக கேரளா வாகனங்கள் கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் செல்ல வழி ஏற்படும் என்றும், இந்த ஆலோசனையை மத்திய அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த பிறகு மிக விரைவில் தொப்பூர் முதல் மேச்சேரி வழியாக பவானி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான ஆய்வுகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொப்பூா் மேட்டுா் சாலை பணிகள் 80 நாட்களில் முடிவடையும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: இளங்கோவன் ஆதரவாளர், ஆடிட்டர் வீடுகளில் ரெய்டு