தென் இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் சங்கம் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தினர் கூறியதாவது, "லாரிகள் அதிக விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு அதிக பாரம் ஏற்றிய லாரிகள் சாலையில் செல்லக் கூடாது என்று அறிவித்துள்ளது. அதற்கான ஆணையமும் வெளியிட்டுள்ளது.
இதில், லாரியில் 13 அடி உயரத்திற்கு மேல் பாரம் ஏற்றக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பலர் மீறிவருகிறார்கள்.
இதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிக உயரம், நீளம், அகலம் பாரம் ஏற்றிச் செல்வதால் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் போது போக்குவரத்து அலுவலர்கள் அதிகம் உயரம் உள்ள பொருட்களை இறக்கி வைத்து விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
இதன் காரணமாக வாகனத்தில் உள்ள பொருள்களை இறக்கி மற்றொரு லாரியில் ஏற்றும் செலவை லாரி உரிமையாளர்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மற்ற மாநிலங்களில் அதிக பாரம் ஏற்றினால் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர் .
ஆனால் தமிழ்நாட்டில் பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால் விபத்து ஏற்பட்டு லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், போக்குவரத் துறை அமைச்சர் தலையிட்டு மத்திய அரசு அமல்படுத்திய புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்.
லாரி உரிமையாளர்கள் குறைந்த அளவு அரசு கூறிய வழிமுறைப்படி பாரம் ஏற்ற எடுத்துரைத்தாலும் பொருள்களின் உரிமையாளர்கள் அதிக பாரம் ஏற்றக்கூடிய வாகனங்களுக்கு மட்டுமே வாடகை தருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள் வேறுவழியின்றி அதிக பாரம் ஏற்றக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.