தர்மபுரி மாவட்டத்தில் போதுமான கோவிட் தடுப்பூசி இருப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு சிறப்பு கோவிட் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தர்மபுரி மாவட்டத்தில் கோவிட் தடுப்பு பணிகள் குறித்து இன்று(ஏப்ரல்.12) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரியில் 200 படுக்கை வசதி கொண்ட கோவிட் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. நானும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசியை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போட்டுக்கொண்டோம்.
தற்போது மாவட்டத்தில் கோவிட் பரவல் அதிகமாக இல்லை. இருந்தபோதிலும் கோவிட் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். நாட்டில் புதிய வகை கோவிட் வைரஸ் வேகமாக பரவிவருகிறது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசிகள், மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. கோவிட் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசியே சிறந்த வழி. அனைவரும் முகக்கவசம் அணிவது சிறந்த வகையான தடுப்பு வழி ஆகும்.
அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். எந்தவித அச்சமும் இல்லாமல் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தர்மபுரியில் 74 பேருக்கு தற்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணிவது கட்டாயம்- தர்மபுரி மாவட்ட ஆட்சியர்