தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள ஏரியை ‘அழகு அரூர் காப்போம்’ அறக்கட்டளையினர் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து, ஏரியில் சிறிய அளவிலான மேடுகள் அமைத்து, பறவைகளுக்காக மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். ஏரியின் கரைப் பகுதி முழுவதும் பலப்படுத்தி உள்ளனர்.
ஏரியில் சீமை கருவேல முள் ஆக்கிரமித்து இருந்தது. இந்த அமைப்பினர் பொதுமக்கள் நிதி உதவி பெற்று ஏரியைத் தூர்வாரி பராமரித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களாகப் பெய்துவரும் மழையின் காரணமாக, ஏரியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அறிந்த தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஏரியைப் பார்வையிட்டார்.
பின்னர் ‘அழகு அரூர் காப்போம்’ அறக்கட்டளை நிர்வாகிகளைச் சந்தித்து, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் தனது நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில்குமார் பதிவு செய்துள்ளார்.