தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா டிசம்பர் 30ஆம் தேதியான்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் முக்கிய நாளான இன்று (பிப். 6) பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்கும் தேர்திருவிழா நடைபெற்றது.
இதில் சிவசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆயிரக்கனக்கான பெண்கள் மட்டும் கலந்துக்கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்ற சரண கோசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேர் வீதி உலா வரும்போது, பக்தர்கள் உப்பு, மிளகு, பொறி, முத்துக்கொட்டைகளை தேர் மீது வீசி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி வழிப்பட்டனர்.
திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உட்பட 3 பேர் பலி!