தர்மபுரி: கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கனஅள்ளி பகுதி சேர்ந்த மாது இவரது மகன் தர்ம துரை (36). இவரது மனைவி பிரபாவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கணவன் தர்ம துரை கண்டித்துள்ளார்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தர்ம துரை மகுடஞ்சாவடி - வீரபாண்டி இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். இவரது இறப்பு குறித்து சேலம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தீவட்டிபட்டி காவல்துறையினரிடம் கோவிந்தராஜ் வேறொரு வழக்கில் சிக்கினான்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தர்ம துரையைக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு கடத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, பிரபாவதி மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரிடம் விசாரணை செய்தார்.
விசாரணையில் கள்ளக்காதலைக் கண்டித்ததால், கணவனைத் தோசை சட்டியால் தலையில் அடித்து கொலை செய்து, பின் உடலை காரில் ஏற்றி ரயில் தண்டவாளத்தில் வீசியதாக பிரபாவதி தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரபாவதி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த வாலிபரை காவல்துறையினர் தேடி வந்தனர். கொலையில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த சிவனஅள்ளி பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் தமிழரசன் (24) வீட்டிற்கு நேற்று வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவரை கொல்ல கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி!