தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி தலைமையாசிரியராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்றும் அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மட்டுமல்லாமல் மன வளர்ச்சியும் பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை அவருக்கு வழங்கிய நல்லாசிரியர் விருதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அளிக்கிறேன் என்று தெரிவித்து விருது மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் வழங்கினார். விருது மற்றும் சான்றிதழை வாங்க மறுத்த மாவட்ட ஆட்சியர், அவர் அளித்த கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டார்.
உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான் இங்குள்ள அலுவலர்கள் உருவாகியுள்ளார்கள். ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்பதனை தெளிவாகக் குறிப்பிட்டு மனு அளித்தால் அந்த மனுவை தலைமை செயலகத்திற்கு அனுப்பி உரிய பதிலைப் பெற்று தருகிறேன் என்று மலர்விழி அல்லிமுத்துவிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய மாநில அரசுகள் நதிகளை இணைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை