தர்மபுரியில் தமிழ்நாடு வீடியோ & போட்டோகிராஃபர்ஸ் அசோசியேஷன், மாநிலத் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “கரோனா பெருந்தொற்றைத் தடுக்க மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை பாராட்டுகிறோம். கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள ஃபோட்டோ ஸ்டூடியோக்களைத் திறந்து, தொழில் செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்" என்று கூறினார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை
இதையடுத்து சங்கத்தின் மாநிலச் செயலர் சிவக்குமார் பேசுகையில், "கரோனா காலத்தில் ஸ்டுடியோக்கள் மூடப்பட்டிருப்பதால், இத்தொழிலை நம்பி தமிழ்நாடு முழுவதிலும் ஐந்து லட்சம் புகைப்படக் கலைஞர்கள் தொழிலின்றி முடங்கியுள்ளதால், கடை வாடகை, மின்சாரக் கட்டணம், வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான தவணைத் தொகை, திருப்பி செலுத்த முடியாமலும் குடும்ப செலவுகளுக்கே திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடைகள் திறக்கபடாமலே இருப்பதால், ஸ்டுடியோக்களில் உள்ள உபகரணங்கள் பழுதாகும் நிலையும் உள்ளதால் எங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு ஸ்டுடியோக்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டு்ம்.
கரோனாவால் உயிரிழந்த புகைப்படக் கலைஞர்களின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய நிவாரணமும், வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் பெற்றுள்ள கடனுக்கான தவணைத் தொகையினை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.