தருமபுரி பெரியாம்பட்டி அருகே உள்ள ராமன்னன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி(50) என்பவரை கடத்தி சென்றுவிட்டதாக அவரது மகன் முத்து (33) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து முத்து கூறும் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது செங்கல் சூளையில் முன் பணமாக 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தானும் தனது தாயும் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறோம்.
பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்த நிலையில் தனது தாய் லட்சுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செங்கல் சூளை வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணன், தனது ஆட்களுடன் கார் ஒன்றில், தங்களது வீட்டிற்கு வந்து 5 லட்ச ரூபாய் பணம் தர வேண்டுமென கூறி தனது தாய் லட்சுமியை காரில் கடத்திச் சென்றுவிட்டதாகவும், கடத்தப்பட்ட தனது தாயை மீட்டு தர வேண்டுமென மகன் முத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் புகார் அளித்த சுமார் ஐந்து மணி நேரத்திற்குள்ளாக காரிமங்கலம் போலீசார் லட்சுமியை கிருஷ்ணகிரியிலிருந்து பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உட்பட 3 பேர் பலி!