தருமபுரி: அதியமான்கோட்டை கால பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை சாம்பல் பூசணியில் மஞ்சள், குங்குமமிட்டு அதன்மேல் பகுதியில் அகல் விளக்கு வைத்து, எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என நம்பிக்கை உள்ளது.
கோயிலின் முன்புறமாக 20க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ஏற்கனவே தயார் நிலைகளில் சாம்பல் பூசணி விளக்கு விற்கப்படுகிறது. சாம்பல் பூசணியில் மஞ்சள் பயன்படுத்துவதற்கு பதிலாக கடை வியாபாரிகள் ஜிலேபி பவுடரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த சாம்பல் பூசணியில், ஜிலேபி பவுடர் தடவும்போது மஞ்சள் பூசியது போல மஞ்சள் நிறமாக மாறுகிறது. அதனோடு விளக்கு வைத்து விற்கின்றனர். மஞ்சள் 50 கிராம் பத்து ரூபாய் விலை அதிகம் என்பதால் ஐந்து ரூபாய்க்கு சிறிய அளவிலான ஜிலேபி பவுடரை வாங்கி அதனை நீரில் நனைத்து சாம்பல் பூசணி மீது பூசுவதால் லாபம் அதிகமாக கிடைப்பதால் இந்த மோசடி செய்கின்றனர்.
கடை உரிமையாளர்கள் தீபம் தட்டை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், மஞ்சளுக்கு பதிலாக ஜிலேபி பவுடரை பயன்படுத்துவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்!