தர்மபுரி மலை கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டமாகும். இங்கு பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டூர் மலை, எரிமலை பகுதிகளில் தற்போதுவரை மக்களுக்கான போதிய சாலை வசதிகள் இல்லை.
இதற்கிடையில், நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோட்டூர் மலை, ஏரி மலையிலுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்குப்பெட்டிகள் கழுதைகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் நான்கு கழுதைகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவுக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சாக்குப்பையில் கட்டி அதனை கழுதைகள் மீது ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 870 வாக்குப்பதிவு மையங்களும், அவற்றில் 1,817 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் பணியில் ஏழாயிரத்து 268 பணியாளர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் 149 நுண் முன் பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும், இங்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கை பணிக்காக வாக்குச்சாவடிக்கு இரண்டு நபர்கள் வீதம் மூன்றாயிரத்து 634 பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.