தர்மபுரி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் கலைச்செல்வி (பாலக்கோடு), தமிழழகன் (பென்னாகரம்), ரமேஷ் (பாப்பிரெட்டிப்பட்டி), செந்தில்குமார் (தர்மபுரி) ஆகியோருக்கு ஆதரவாக சீமான் இன்று (மார்ச் 12) பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, "அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் புனிதமான அமைப்பு என்பதைத் தாண்டி அதிகமாக பணம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள். இதனைத் தகர்த்து நல்ல ஆட்சி மலர செய்வதுதான் மாற்றம்.
பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற முறையை மாற்றி, மக்களுக்குத் தூய உள்ளத்தோடு சேவை செய்கின்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பல ஆயிரம் கோடி பணத்தைக் கொட்டி தேர்தலைச் சந்திக்கின்ற பணநாயக முறையிலிருந்து மாண்புமிக்க ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது, அரசு மருத்துவமனையில் உலகத் தரமான மருத்துவம், தரமான சாலை, தடையற்ற மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை செய்துதரப்படும்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி வைத்துதான் போட்டியிடுகிறார்கள்.
நாங்கள் மக்களோடு மிகப்பெரிய கூட்டணி வைத்திருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமையைப் பாதுகாக்க தேர்தல் களத்தில் சனாதன சக்திகளை வீழ்த்துவோம்!