தருமபுரி: அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மனைவி முனியம்மாள் (70) என்பவர், நேற்று முன்தினம் (நவ.25) அன்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட பொதுப் பாதையை மறுதரப்பினர் வழி விடாத வகையில் வேலி அமைத்துள்ளனர்.
அதனை அடுத்து, இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று புதைப்பதற்கு பாதை இல்லாத காரணத்தினால், மூன்று நாட்களாக இறந்த மூதாட்டியின் சடலத்தை அவரது வீட்டின் முன்பு வைத்தபடி, அடக்கம் செய்ய முடியாமல் அம்மக்கள் தவித்து வந்தனர்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கு என்ற பெண்மணி உயிரிழந்த போதும், அந்த சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பொது பாதையை மறுதரப்பு மக்கள் பயன்படுத்த இடையூறு அளித்தை அடுத்து, இறந்தவரின் உடலை வீட்டின் முன்பே வைத்து விட்டு, அம்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களுக்குப் பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அந்த விவகாரத்தில் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக வழிப்பாதை ஏற்படுத்திக் கொடுத்ததை அடுத்து, இறந்தவரின் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் , வருவாய்த் துறையினரிடம் அளித்த மனுவின் அடிப்படையில், கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையிலும் தீர்வு கிடைக்காமல் இருந்ததுள்ளது.
இந்நிலையில், மறைந்த 70 வயது மூதாட்டியின் உடலை மூன்று நாட்களாக அடக்கம் செய்யாமல் வைக்கப்பட்டிருப்பதைக் குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மறு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில், இன்னும் 20 நாட்களுக்குள் மயானத்திற்குச் செல்வதற்கான நிரந்தர தனி வழி அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில், தற்போது மாற்றுப் பாதையில் உடலை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து உடலை தனியார் அமரர் ஊர்தி மூலம் மாற்று வழிப் பாதையில் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது, வழியில் மழை பெய்து தண்ணீர் தேங்கி இருந்ததில், வாகனம் சிக்கிக் கொண்டது. அதனை அடுத்து, உறவினர்கள் இறங்கி போராடி தள்ளி வாகனத்தை செல்ல வைத்தனர். அரை கி.மீ தூரத்தில் உள்ள மயானத்திற்கு, 4 கி.மீ சுற்றி சென்று அடக்கம் செய்யும் அவலமான நிலைக்கு கொளாப்பாறை கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, 20 நாட்களுக்குள் தங்களுக்கு மயானத்திற்கான நிரந்தர வழிப்பாதை அமைத்து தராவிட்டால் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாலத்தீவில் சிக்கியுள்ள தூத்துக்குடி மீனவர்கள்.. தருவைகுளம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்.. பின்னணி என்ன?