பெங்களூருவில் இருந்து இன்று (பிப்.8) காலை சசிகலா தமிழ்நாடு புறப்பட்டார். சென்னை புறப்படும் முன்பு பெங்களூருவில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 11 மணியளவில் ஜூஜூவாடி பகுதிக்கு வந்தடைந்தார். இதனிடையே சசிகலா வரும் காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொடி அகற்றப்பட்டது.
ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் சசிகலா அதிமுக துண்டுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஓசூர் ஜூஜூவாடி அருகே வேறு ஒரு காருக்கு மாறினார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கிறது. சசிகலா மாறிய மற்றொரு காரில் அதிமுக கொடி பறப்பதால் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி காவல்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். காவல்துறை நோட்டீஸ் அளித்தும் அதிமுக கொடி அகற்றப்படவில்லை.
மேலும், ஜூஜூவாடி பகுதியிலிருந்து, கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதி வரை சுமார் 53 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க 4 மணிநேரம் ஆகியுள்ளது. சசிகலா கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை வரையிலான 259 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 10 மணி நேரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை வர 5 மணி நேரம் ஆகும். சசிகலாவை வரவேற்க சாலையின் இருபுறமும் அமமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பயண நேரம் இருமடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உடனுக்குடன்: தமிழ்நாடு வந்தடைந்த சசிகலா