சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சேசம்பட்டி அருகே மோகனப்பிரியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வங்கிகளுக்கு பணம் எடுத்து செல்லும் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 5 கோடி 32 லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த பணமானது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என வண்டியிலிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களிடம் அதற்குரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கைப்பற்றப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
தருமபுரியில் ஒரே சமயத்தில் இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். கடந்த இரு நாட்களுக்கு முன்பு 3.47 கோடி ரூபாய் அரூரில் அரசு பேருந்தில் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது உரிய ஆவணம் இல்லாமல் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கைப்பற்றப்பட்டுள்ளது.