தர்மபுரி: பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கு தமிழ்நாடு சொசைட்டி நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் இருந்து முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நான்கு மண்டலங்களாக பிரித்து நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கிய ஒரு மண்டலத்தின் வாயிலாக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் முட்டைகள் அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமையலர்கள் முட்டையை வேக வைத்துள்ளனர். அப்போது முட்டை உரிக்கும் பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகி, துர்நாற்றம் வீசுகின்ற நிலையில் இருந்துள்ளன.
இதனையடுத்து சமையலர்கள் தலைமை ஆசிரியருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் முட்டையின் தரத்தை ஆய்வு செய்து, அழுகிய முட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு வேறு முட்டை கொடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாப்பாரப்பட்டி பிக்கிலி, புதுக்கரும்பு, மாங்கரை, கருபணம்பட்டி மாக்கனூர், பெரும்பாலை, அருகே உள்ள ஆலமரத்தூர் புதூர் நாகமரை, ஏரியூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு கடந்த சில நாட்களாக மதிய உணவுடன் தரம் இல்லாத அழுகிய முட்டைகள் துர்நாற்றத்துடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலனிடம் கேட்டபோது, “மாக்கனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மட்டும் முட்டைகள் அழுகி நிலையில் இருப்பதாக புகார் கிடைத்தது. இதனை அடுத்து அந்த முட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு மாணவர்களுக்கு வேறு முட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை முட்டை வழங்கியவர்களின் ஒப்பந்தம் முடிந்து விட்டது.
ஒருவேளை ஒப்பந்தம் முடிகின்ற தருவாயில் இருக்கின்ற முட்டைகளை அவர்கள் அப்படியே வழங்கி இருக்கலாம். ஆனால் இதனை அறிந்து தற்பொழுது அவர்களது ஒப்பந்தம் மாற்றப்பட்டு, வருகின்ற வாரங்களில் முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தம் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பள்ளிகளுக்கு எங்கும் இது போன்ற முட்டைகள் வழங்கப்படவில்லை. மற்ற எல்லா பள்ளிகளுக்கும் தரமான முட்டைகளை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்