தருமபுரி மாவட்டம் அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள மருந்தகங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள், நகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆங்கில பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆங்கில பெயர் பலகைகளை மாற்றி தமிழில் பொருத்த வேண்டும் என தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி, தமிழ் இலக்கிய தன்னார்வலர்களுடன் இணைந்து வணிக நிறுவனங்களுக்கு சென்று துண்டு பிரசுரம் வழங்கினார்.
இதுகுறித்து ஜெயஜோதி கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெயர்ப் பலகைகளில் முதலாவதாக தமிழில் ஐந்து மடங்கும், இரண்டாவதாக ஆங்கிலத்தில் மூன்று மடங்கும், மூன்றாவதாக பிற மொழிகள் இரண்டு மடங்கு என்ற அளவில் அமைய வேண்டும் என அரசால் ஆணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் பெயர்ப் பலகைகள் அரசாணையின்படி தமிழில் அமைக்கப்படுவதில்லை என்பதால் ஆங்கிலத்தில் உள்ள பெயர்ப் பலகைகளை மாற்றி தமிழில் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அரசு செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய படிப்புக்கால விடுப்பு வழங்குக!