தருமபுரி மாவட்டம் சிங்கம்பட்டி அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மீனா. இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். விடுப்பு முடிந்து ஆசிரியை பணியை தொடர்ந்த மீனா, தனது நான்கு மாத ஊதியத்தில் இரண்டு மாத ஊதியம் கிடைக்கவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து அவர் தருமபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் குமரேசன் என்பவரை சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த குமரேசன், தனக்கு 2000 ரூபாயும், வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணிக்கு 3,000 ரூபாயும் லஞ்சம் வழங்கினால் ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் வழங்க விரும்பாத ஆசிரியை மீனா தனது கணவருடன் தருமபுரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ஆசிரியை மீனாவிடம் ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினர். இதனையடுத்து ஆசிரியை மீனா வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள குமரேசன், வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணிக்கு லஞ்சம் வழங்கியபோது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், லஞ்ச வழக்கில் சிக்கிய வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணி பதவி ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று மாத காலமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது