கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக, தென்பெண்ணையாற்றில் சுமார் 500 கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கே.ஈச்சம்பாடியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி, சாத்தனூர் அணைக்குச் செல்கிறது.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஆற்றில் குளிக்க, இறங்க, கால்நடைகளைக் கொண்டு வர வேண்டாம் என கடந்த வாரமே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், நீர்வரத்து மேலும் அதிகரித்து கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நயன் கவர்ச்சி போட்டோஷுட்டுக்கு முன்னால் நடந்தது... வெளியான மேக்கிங் காணொலி
இதனால் நேற்று அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு வரும் 2500 கன அடி தண்ணீரை உபரி நீராக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில், மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் காரிமங்கலம் அடுத்த பெரமாண்பட்டி - அக்ரஹரம் கிராமத்திற்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அக்ரஹாரம் கிராம மக்கள் ஐந்து கிமீ சுற்றி பெரமாண்டப்பட்டி வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, பெரமாண்டபட்டி- அக்ரஹரம் கிராமத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, அப்போதைய அரூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஆர்.ஆர். முருகன் பணிகளைத் தொடங்க பூமி பூஜை செய்ததாகவும், அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பணியை விரைந்து தொடங்கினால் இதுபோன்ற வெள்ளம் ஏற்படும் காலங்களில், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது எனக் கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபேஷன் ஃபோட்டோ ஷூட்டில் கலக்கிய தீபிகா படுகோன்
மேலும் தென்பெண்ணை ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் வருவாய்த்துறையினர் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். ஆற்றில் பொதுமக்கள் இறங்கி, குளிப்பதற்கு அனுமதிக்காமல் வருவாய்த் துறையினர் முழுநேர கண்காணிப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தி இருந்தார். ஆபத்தை அறியாமல், தென்பெண்ணை ஆற்றில் சிறுவர்கள் குளிப்பதால், உயிர்சேதம் ஏற்படுகிறது ஆகவே ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் ஆற்றில் குளிப்பதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்