தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருங்கல்பாடி கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இதில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழக்கின்றன.
இறந்து போன கோழிகளை சுகாதாரமற்ற முறையில் தீயிட்டு எரிப்பதால் அப்பகுதிகளில் கரும்புகையுடன் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால், மேல் செங்கப்பாடி, கருங்கல்பாடி, ஆலம்பாடி, மூன்றம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும், ஆடு, மாடு மேய்ச்சலுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அப்பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈக்களின் மூலம் பரவும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அக்கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்நிலையில், ஈக்களின் தொல்லை அதிகரிப்பால் கிராம மக்கள் நேற்று (ஆக.12) தனியார் கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் முறையிட சென்றனர். அப்போது பொதுமக்களை கோழிபண்ணை நிர்வாகத்தினர் பூட்டு போட்டு அடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் விரைந்து சென்று பூட்டை உடைத்து உள்ளே இருந்த கிராம மக்களை மீட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “கோழிப்பண்ணை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது, இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.
வேட கட்டமடுவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம மக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தக் கோழி பண்ணையை நடத்தி வருகின்றனர், சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் இருக்கும் இந்தக் கோழிப்பண்ணையை அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்தனர்