தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்கு வசதியாக தபால் ஓட்டுகள் பதிவு செய்ய சிறப்பான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும் இடத்திலேயே தபால் ஓட்டுக்கள் தொடர்பான படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. விருப்பமுள்ள காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் அவர்களது தபால் வாக்கினை பூர்த்தி செய்து உரிய இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பான பெட்டிகளில் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
சுமார் 9 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தபால் ஓட்டுகள் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. தருமபுரியில் நடைபெற்ற இந்த ஏற்பாடுகளை சார் ஆட்சியர் சிவனருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.