தர்மபுரியில் உலக சிவனடியார்கள் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா நேற்று (ஜூன்19) நடைபெற்றது. இந்த விழாவில் தலைமையேற்று பேசிய பொன் மாணிக்கவேல், 'உலகத்தில் உள்ள அனைத்து சிவனடியார்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்; ஆலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உலக சிவனடியார்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கடந்த 1960ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் சேந்தங்குடி சிவன் ஆலயத்திலிருந்த உமா பரமேஸ்வரி அம்மன் தெய்வ சிலை வெளிநாட்டு இளவரசி ஒருவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து மனம் மிகுந்த வேதனையளிக்கிறது. நமது கலை, கலாசாரம், பண்பாடு, ஆன்மீகம் உள்ளிட்டைவகளை அறிந்து, உணர்ந்து அந்த சிலைகளை மீண்டும் நம்மிடமே ஒப்படைப்பார் என நம்புகிறோம். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, தெய்வ சிலைகளைப் பரிசாகக் கொடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.
சிறப்பு மிகுந்த கோயில் சிலைகளை பரிசாகவும் கொடையாக வழங்குவது அந்த தெய்வங்களை அவமரியாதை செய்வதற்கு சமம். இச்செயல்களை யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கடத்தப்பட்ட அல்லது திருடப்பட்ட கோயில் சிலைகளை மீட்பதற்கு உலக சிவனடியார்கள் அமைப்பு தொடர்ந்து பாடுபடும். இதற்காக மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு தயங்காது’ என பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்பு!