தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், செக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ராஜேஷ் கண்ணா(30). இவர், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தார். ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் வாராந்திர பயிற்சியில் பங்கேற்க தமது இருசக்கர வாகனத்தில் நேற்று (நவ. 28) அதிகாலை அரூர் மொரப்பூர் சாலை வழியாக தருமபுரி நோக்கிச் சென்றார்.
அப்போது சேவா கிராமம் எனுமிடத்தில் நடந்த விபத்தில் காவலர் ராஜேஷ் கண்ணா படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவலரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (நவ. 29) அதிகாலை உயிரிழந்தார்.
காவலர் ராஜேஷ் கண்ணா உடலுக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் உள்ளிட்ட காவல் துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த காவலர் ராஜேஷ் கண்ணாவுக்கு செல்வி(24) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.