தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் சில இளைஞா்கள் நகரில் சுற்றித்திரிந்து போலீசாருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனா். இளைஞா்கள் மருத்துவமனை செல்வதாகச் சொல்லிவிட்டு இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு கட்டுப்படுத்தி வருகின்றனர். இன்று காலை சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி நூதன தண்டனை வழங்கினா்.
வீட்டை விட்டு வெளியே வந்தால் கரோனா வைரஸ் தொற்று வரும் என்று ஒவ்வொருவரும் 25 முறை சொல்லச் சொல்லி நூதன தண்டனை வழங்கினர். காவல் துறையினர் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அவரவர் வீடுகளுக்கு அருகே வாகனங்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.