தருமபுரி: பென்னாகரம் அருகே மாமியார் பிரச்சனை செய்து வருவதாகவும், தன்னை துன்புறுத்தி வருவதாகவும் சிறுமி ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரை, ஏரியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் (வயது 55) விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட சகாதேவன், புகார் சம்பவம் குறித்து தொடர்ந்து சிறுமியிடம் பேசத் தொடங்கி, அவரிடம் நெருங்கி பழகி, பிறகு பாலியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால், கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பச்சை உறை பாலை நிறுத்தும் ஆவின்... முறைகேடுகள் தான் காரணம் என்கிறார் அன்புமணி!
இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததால், குழந்தைகள் நல உறுப்பினர்கள் அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில், ஏரியூர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் சகாதேவன், தன்னிடம் மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதனையடுத்து, பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்... பயிற்சி மாணவர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!