தருமபுரி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில், அதில் பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடியும். தமிழ்நாடு, கா்நாடகா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் வெற்றி பெற முடியவில்லை என்றும், கோமுத்ரா மாநிலங்களில் தான் வெற்றி பெற முடியும் என்று பேசியிருந்தார்.
அவா் பேச்சுக்கு நாடாளுமன்றத்திலும் நாட்டின் பல பகுதியில் எதிா்ப்பு கிளம்பியது. தனது பேச்சுக்கு சமுக வலைதளம் வழியாக செந்தில்குமார் மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் கோமுத்ரா குறித்து பேசியதை கண்டித்து தருமபுரி பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினருக்கு தருமபுரி நகர போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உட்பட 35 நபர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.