தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் நான்கு வழிச்சாலையில், அரசு மருத்துவர் பெயரில், அவரது சகோதரி தனியார் மருத்துவமனை நடத்தி போலியான வகையில் மருத்துவம் பார்ப்பதாகப் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் கற்பக வடிவு, அரசு வட்டார மருத்துவ அலுவலர் அருண் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அம்மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், அரசு மருத்துவர் பெயரில் விளம்பரப் பலகை வைத்து, அவரது சகோதரியான தேவி (45) போலியான ,முறையில் மருத்துவச் சிகிச்சை அளித்துவந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்காமல் மருத்துவச் சிகிச்சைகள் அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அம்மருத்துவமனையிலிருந்து ஏராளமான ஊசி, மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர், போலி மருத்துவர் தேவியைக் கைது செய்தனர்.