பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
அந்தவகையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு நபர் ஆர்ப்பாட்டக்கார்களிடம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நபரைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்த நபரின் மண்டையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வழிந்தது.
இதைப்பார்த்த அங்கு பாதுகாப்புப் பணிக்கு இருந்த காவல் துறையினர் அவரை மீட்டு முதலுதவி செய்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
பாமகவினர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதை மாற்றப்பட்டது. இதனால் தர்மபுரி முழுவதும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.