Tamil Nadu Latest News Updates: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80ஆம் ஆண்டு முத்து விழா பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது கனவுத் திட்டமான ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர் திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்துவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்றும் முதலமைச்சர் உறுதி அளிப்பதற்கும் மற்றவர்கள் அளிக்கும் உறுதிக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம் எனவும் சாடினார். தமிழ்நாட்டிற்குத் தேவையான நல்ல திட்டங்களைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம் என்றும் தேவைப்பட்டால் அத்திட்டத்தை செயல்படுத்த பாமக போராடும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டபோது ஸ்டாலின், சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியேயும் அத்திட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்ததாகவும், ஆனால் தேர்தல் நேரத்தில் எட்டு வழிச்சாலையை எதிர்ப்பதாக கூறி மக்களை ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டினார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 'புழுகு மூட்டை ஸ்டாலின்' என்று பெயர் வைத்து விடலாம். ஏனெனில் அவர் வாயைத் திறந்தால் பொய் மட்டுமே வருவதாகவும் சாடினார்.
விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் திமுக வழக்கறிஞர் கொண்டு எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வாதாட வேண்டும் என்றும் ஆனால் ஸ்டாலின் தேர்தலுக்காக கூறிய பொய் என்பதால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் கூறினார்.
கடந்த தேர்தலில் திமுகவை நம்பி வாக்களித்த மக்கள் இனி எப்போதும் அவர்களை நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.