தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உள்பட்ட ஏரியூர் பகுதியில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அண்ணா நகர், நேதாஜி நகர். இந்த கிராம பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயது இருந்தபோது காய்ச்சல் காரணமாக அவரது இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது, மேலும் காது கேட்கும் திறனும் செயலிழந்தது. மாற்றுத்திறனாளியான இவா் தையல் வேலை செய்து வருகிறார்.
மூர்த்தி வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒன்றரை கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு தமிழக அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய மூன்று சக்கர வாகனத்தில் தன் வீடு வரை அவர் பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில்தான் உள்ளார்.
இதற்கு காரணம் அவரது வீட்டிற்குச் செல்ல மூன்று அடி அகலமான சிறிய பாதை மட்டுமே உள்ளது. அந்த பாதையில் மூன்று சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. தினமும் சுமார் ஒரு கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் தவழ்ந்து வந்து பின்பு தனது மூன்று சக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்கிறார்.
இந்த கரடுமுரடான பாதையில் அவர் தவழ்ந்து செல்லும் காட்சி காண்பவர்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறுதான் கடந்த 20 ஆண்டுகளாக அவர் வீட்டுக்குச் சென்று வருகிறார். மேலும் இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் ஏரியூா் பகுதிக்குப் படிக்க வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான பாதை வசதி இல்லாத காரணத்தால் மழை காலங்களில் கடும் சிரமத்துடன் பள்ளிக்குச் சென்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இப்பகுதி அமைந்துள்ள அண்ணா நகர், நேதாஜி நகருக்கு 10 அடி பாதை இருந்ததாகவும் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக மூன்று அடியாக சுருங்கி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்மின்க்கு சொந்தமான பாதை உள்ளது. அந்தப் பாதையை பயன்படுத்தினால் அரசு அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்ணா நகர், நேதாஜி நகர் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் என அனைத்து சமூக மக்களும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்டவா்கள், உயிரிழந்தவா்களை தொட்டில் கட்டிதான் தூக்கி செல்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். சாலை வசதி கோரிக்கை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்