100 நாள் வேலை வழங்காத ஊராட்சித் தலைவர்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்! - ஊராட்சிமன்ற தலைவர்
தருமபுரி: பாலக்கோடு அருகே 100 நாள் வேலை திட்டம் வழங்காத ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம் பெண்களுக்கு முறையாக வழங்கவில்லை எனக் கூறி ஐந்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அனுமந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் லீலாவதி பாஸ்கர், ஒரு கிராமத்திலுள்ள மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிக அளவு நாள்கள் வேலை வழங்கியும், மற்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை இல்லை எனக்கூறி காலம் தாழ்த்திவருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், வையங்கொட்டாய், அனுமந்தபுரம், மதனேரி கொட்டாய், மொட்டையன் கொட்டாய், முனியப்பன் கோவில் உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமந்தபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.