தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் குடுமியாம்பட்டியில் கிராம மக்கள் காணும் பொங்கலுக்கு அடுத்த நாள் ஆண்டுதோறும் முயல் விடும் விழா நடத்துவது வழக்கம். பொங்கல் விழாவில் பல இடங்களிலும் எருது விடும் விழா, ஜல்லிக்கட்டு போன்ற விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆண்டுதோறும் குடுமியாம்பட்டியில் முயல் விடும் விழா நடைபெற்று வருகிறது.
குடுமியாம்பட்டி இளைஞர்கள்100க்கும் மேற்பட்டோர் விடியற்காலையில், ஊரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, வனப்பகுதிக்குச் சென்று முயலைப் பிடித்து வந்தனர். வனப்பகுதிக்குச் சென்று ஒரே நாளில் முயலைப் பிடித்துவருவது, இளைஞர்களுக்கு விடப்படும் சவாலாகவே இந்த கிராமத்தில் கருதப்படுகிறது. குடுமியாம்பட்டியில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது.
இந்த ஆலமரம் அமைந்துள்ள வளாகத்தில் அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் முன்பும் அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன், ஸ்ரீ மாரியம்மன் சுவாமிகளின் முன்பும் விழாக்குழுவினர் சார்பில் இளைஞர்கள் பிடித்து வந்த முயலைக் காட்டினர். பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் முயலை வணங்கினர். இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு விழாக் குழுவினர் முயலை கோயில் வளாகத்தில் விட்டனர்.
அப்போது துள்ளிக் குதித்து ஓடிய முயலைப் பிடிக்க இளைஞர்கள் நீண்ட தூரம் துரத்திச் சென்றனர். ஆனால், வேகமாக ஓடிய முயலானது வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த முயல் விடும் விழாவில் அச்சல்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் த.கிருபாகரன், ஊர் தலைவர்கள் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அபய வரதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கோ பூஜை விழா