தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 34 தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்ஃபி எடுக்கவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் விதித்த தடை தற்போதும் அமலில் உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88ஆயிரம் கனஅடியாக உள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.15) சுதந்திர தின விழாவையொட்டி, விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் சிலர் மடம் சோதனை சாவடி வழியாக ஒகேனக்கலுக்கு வந்து தடையை மீறி, காவிரி ஆற்றங்கரை ஓரப்பகுதியில் ஆபத்தை உணராமல் குளித்தும் சில இளைஞர்கள் ஆர்வ மிகுதியால் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மடம் சோதனைச்சாவடியில் போலீசாரும் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு சில விடுதி உரிமையாளர்கள் சுற்றுலாப் பயணிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு காவல்துறை மற்றும் வனத்துறைக்குத் தெரியாமல் அழைத்துச் செல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
எனவே, இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி ஒகேனக்கலில் சுற்றுலா அழைத்துச்செல்லும் விடுதி உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் ஆர்பரிக்கும் நீர் - பரிசல் இயக்க 30ஆவது நாளாக நீடிக்கும் தடை