தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. குறிப்பாக, தர்மபுரி தொகுதியில் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் தொகுதியில் பி.என்.பி இன்பசேகரன், பாலக்கோடு தொகுதியில் முருகன், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பிரபு ராஜசேகர் போட்டியிடுகின்றனர்.

இன்று திமுக வேட்பாளர்கள் தர்மபுரியில் உள்ள பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான தடங்கம் சுப்பிரமணி, "தர்மபுரியில் அரூா் தொகுதியை தவிர மீதமுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதுதான் எங்கள் தலையாய கடமை. கடுமையாக உழைத்து ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே எங்கள் பணி. தர்மபுரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவோம்.
மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசை தூக்கி எறிய அனைத்து தரப்பு மக்களும் தயாராகி வருகிறார்கள். வணிகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் 10 ஆண்டு காலத்தில் தாங்கள் பாதிக்கப்பட்டதே போதும் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக உழைக்கின்ற தலைவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.