தர்மபுரி: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்தார். மாவட்ட எல்லையிலிருந்து அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சியில்லை. தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. கரோனா காலம் என்று கூட பாராமல், ஆட்சி பொறுப்பேற்ற பின்பு சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். திமுக அரசு ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தடை செய்ய வேண்டும். இதனால் ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்து, வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆனால் அதை தடை செய்யாமல், பொதுமக்களிடம் கருத்து கேட்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை கிராமத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் கூட வேண்டாம் என்றுதான் செல்வார்கள். உலகத்திலேயே ஆன்லைன் சூதாட்டத்துக்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எண்ணேகோல்-தும்பலஹள்ளி நீர்பாபாசன திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு திட்டம், ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்ற வில்லை என்றால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிறைவேற்றுவோம்.
அதிமுகவே உடைக்க வேண்டும் என திமுக திட்டமிட்டு, அதிமுக தொண்டர்கள் மீது வழக்கு போட்டு வருகிறது. எங்களை முடக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் நீங்கள் வழக்கு போடுகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நாங்கள் வீறுகொண்டெழுவோம். திமுக சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்துவிட்டது. சில துரோகிகள் நம்முடன் இருந்து கொண்டே, நம்மை ஆட்சிக்கு வரவிடாமல் செய்து விட்டனர். இப்பொழுது திமுகவோடு, கைக்கோர்த்து கொண்டிருந்த துரோகிகளை தெரிந்து கொண்டோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!