தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, ஓசூர், திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகளுக்கு தொழிலாளர்கள் ரயில் மூலம் வேலைக்குச் சென்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு - ஓமலூர் இடையேயான ரயில்பாதை, மின்சார வழித்தடமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் பணிக்கு செல்வோர், பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து, மின் வழித்தடப் பணிகள் நிறைவடைந்து இரு மாதங்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் நடைபெற்றது. பெங்களூரு - ஓசூர் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் (06577) சேவை, ஏப்ரல் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தர்மபுரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, இன்று காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், பையப்பனஹள்ளி, கர்மேலரம், ஆனேக்கல், ஓசூர், ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு வழியாக தர்மபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில் சேவை தொடங்கியதால், மக்கள் ரயிலை உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த மின்சார ரயில் சேவை மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, பெங்களூருக்குப் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பயனடைவார்கள்.
தர்மபுரி எம்.பி., நவிழ்ந்த நன்றி: 14 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மபுரி வழித்தடத்தில் புதிய ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்பதில் வெட்கமில்லை - எஸ்.வி.சேகர்