விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண்களை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தருமபுரியிலுள்ள பாஜக மகளிரணியினர் மாவட்டத்திலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அனுமதியின்றி பிரதமர் மோடி மற்றும் பாஜகவினருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் பாஜகவினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக இரு தரப்பினரையும் தடுத்து, அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 11 பேரை கைது செய்தனர்.
இதையறிந்த விசிக நிர்வாகிகள், தங்கள் கட்சியைச் சேர்ந்த 11 பேரையும் விடுதலை செய்யக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்ரனர்.
இதற்கிடையில், சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விசிகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் தருமபுரி-சேலம் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.