தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சி ஏரிமலை, கோட்டூர்மலை, அலக்கட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்றார். அப்போது ஏரிமலையைச் சேர்ந்த முத்து என்ற பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
அதைக்கண்ட அவரது உறவினர்கள் சாலை வசதி இல்லாத கிராமத்திலிருந்து, மூன்று கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள் மீதே தூக்கி வந்துள்ளனர். அப்போது மலைக்கிராம மக்களுக்குத் தன் சொந்த செலவில், அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்குவதற்குச் சென்ற பென்னாகரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன், பூச்சிமருந்து உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அப்பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதுகுறித்து இன்பசேகரன் கூறுகையில், 'வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களான கோட்டூர் மலை, ஏரிமலை, அலக்கட்டு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால், இந்நாள் வரை மலைக்கிராமங்களுக்குச் சாலை வசதி செய்து தரப்படவில்லை. எனவே, மக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அரசிடம் அனுமதி பெற்று சாலை வசதியின்றி இருக்கும் மலைக் கிராமங்களுக்கு உடனடியாக சாலை ஏற்பாடு செய்து தர வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:அம்மா உணவகம், வடமாநில தொழிலாளர்கள் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு