தருமபுரி அருகே உள்ள அன்னசாகரம் ஏரியில் 77 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 70 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன்,
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அணையாளம், அணைக்கட்டு, என்னேகொல்புதூர், ஜெர்த்தலாவ், பொதியன்பள்ளம், மாரியம்மன் கோம்பை, குமராம்பட்டி உள்ளிட்ட நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
சனத்குமார் நதியை புனரமைக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ.50 கோடி மதிப்பில் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சனத்குமார் ஏரி தருமபுரி வழியாக 42.84 கி.மீ. தூரம் சென்று மொரப்பூர் ஒன்றியம் கெலவள்ளி ஊராட்சி, கூடுதுறைப்பட்டி தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
சனத்குமார் நதியின் வழித்தடம் முற்றிலுமாக வருவாய் துறை ஆவணங்கள் மூலம் நில அளவீடுகள் மேற்கொண்டு உறுதியான எல்லை கற்கள் பதிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்படும். மேலும் இந்த நதியில் நிலத்தடி நீரை செறிவூட்ட 383 மூழ்கு குழிகள், 184 செறிவூட்டு குழிகள், 36 செறிவூட்டு கிணறுகள், 52 கம்பிவலை கல் தடுப்பணைகள், 36 கான்கீரிட் தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.