செங்கல்பட்டு: சென்னையை அடுத்து குன்றத்தூர் மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். இவரது மனைவி பவித்திரா, மகள் வைஷ்ணவி, மகன் சாய் சுதர்சன். இவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் எலிகளை பிடிக்க கெமிக்கல் மருந்து வைக்கப்பட்டது.
இந்த கெமிக்கல் மருந்து காற்றில் பரவி வீட்டில் உள்ளவர்கள் இந்த காற்றை சுவாசித்தால் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிறுமி வைஷ்ணவி மற்றும் சிறுவன் சாய் சுதர்சன் உயிரிழந்தனர். குழந்தைகளின் தாய் பவித்திரா மற்றும் தந்தை கிரிதரன் என பெற்றோர் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் குழந்தைகளின் உடல் கூராய்வு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: இரு பிஞ்சுகளின் உயிரைப் பறித்த எலி மருந்து.. தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது.. அபாய கட்டத்தை தாண்டிய பெற்றோர்!
இந்த நிலையில், இன்று இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்த நிலையில் இருவரிடமும் குன்றத்தூர் காவல்துறையினர் குழந்தைகளின் உடற்கூறு ஆய்விற்கான படிவத்தில் அனுமதி கையெழுத்து பெற்றனர். இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும், கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் குன்றத்தூர் காவல்துறையினர் முன்னிலையில் வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரிதரன் வீட்டிற்கு எலி மருந்து வைத்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த சங்கர் தாஸ், தினகரன் ஆகியோரை கைது செய்த போலீசார், நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம் குமாரை தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்