சென்னை: பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீசாரும், மதுரை போலீசாரும் தனிப்படை அமைத்து களம் இறங்கினர்.
இதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கார் மூலம் பகலில் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம், சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன், அவரை எழும்பூர் 5-வது கோர்ட்டு விடுமுறை மாஜிஸ்திரேட்டு ரகுபதி ராஜா முன்னிலையில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.
இதையும் படிங்க: அஸ்வத்தாமன் குண்டாஸை எதிர்த்து தாய் மனு; தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!
அப்போது, "நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவிப்புக்கு ஆளாகும். எனவே என்னை சிறையில் அடைக்காமல், ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்" என நடிகை கஸ்தூரி வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் அவருடைய வேண்டுகோளை மாஜிஸ்திரேட்டு நிராகரித்து அவரை வருகிற 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்