சென்னை: ’கங்குவா’ திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர்கள் இரா. சரவணன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு படக்குழுவினர் உலகம் முழுவதும் சென்று விளம்பரம் செய்தனர்.
மேலும் இப்படத்தின் ப்ரமோஷன்களில் சூர்யா சினிமா கலைஞர்கள் 'இப்படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள்' எனவும், ஞானவேல் ராஜா இப்படத்திற்கு 2000 கோடி வசூல் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்நிலையில் கங்குவா திரைப்படம் வெளியானது முதல் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி நெட்டிசன்கள் கங்குவா படக்குழுவை மீம்ஸ்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் சூர்யா, சிவா ஆகியோர் மீது தனிப்பட்ட தாக்குதல்களையும் செய்து வருகின்றனர்.
திரைப்பட விமர்சனம் செய்வது அவரவர் சுதந்திரம்,
— Seenu Ramasamy (@seenuramasamy) November 17, 2024
கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் திரு சூர்யா சிவகுமார் போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது…
இதனிடையே சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் நன்றாக வரவில்லை, சத்தம் இரைச்சலாக உள்ளது என்றும், ஆனால் அதற்காக படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் அளிப்பது தவறானது என எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள்… pic.twitter.com/0SAJmTEZCh
— இரா.சரவணன் (@erasaravanan) November 18, 2024
இரா.சரவணன் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல்வாதிகள் தவறு செய்யும் போது நாம் கேள்வி கேட்பதில்லை. ஆனால் சினிமாக்காரர்கள் மீது கொந்தளிக்கின்றனர்" எனவும் மேலும், "சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை. இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம்.
3 மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள்.
இதையும் படிங்க: ”எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியுள்ளேன்”... இயக்குநர் பாலா குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி!
உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி. நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல" என கூறியுள்ளார். இதேபோல் இயக்குநர் சீனு ராமசாமி படத்தை மட்டும் விமர்சிக்காமல் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வருத்தமளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்