சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் யானையான தெய்வானை தாக்கிதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தரான சிசுபாலன் ஆகிய இருவர் படுகாயமடைந்ததாக கோயில் நிர்வாகம் இன்று பிற்பகலில் தெரிவித்தது. பலத்த காயத்துடன் இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அளித்த தகவலின்படி இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக கோயில் காவல்நிலைய போலீசார் அளித்த தகவலின்படி, இன்று பிற்பகலில் தெய்வானை யானை அதன் இருப்பிடமான ராஜகோபுரம் அருகே உள்ள கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. பாகன் உதயகுமார் தமது உறவினரான சிசுபாலன் முருகன் கோயிலில் தரிசனத்திற்காக வந்திருந்த நிலையில் , அவரையும் கூண்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். சிசுபாலன் நாகர்கோயிலிலிருந்து சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
உணவு வழங்கிக் கொண்டிருந்த பாகன் உதயகுமாரை யானை தெய்வானை திடீரென துதிக்கையால் தாக்கியுள்ளது. கீழே விழுந்த அவரின் முகத்திலும் யானை மிதித்த நிலையில் முகம் சேதமடைந்தது. பதற்றமடைந்த சிசுபாலன் உதயகுமாரை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது சிசுபாலனையும் துதிக்கையால் தெய்வானை தாக்கியுள்ளதாக போலிசார் கூறியுள்ளனர். உணவு வழங்கும் நேரத்தில் தெய்வானை யானை கட்டிப்போடப்பட்டிருந்ததால், மற்ற பாகன்கள் அதனை கட்டுப்படுத்தி இருவரையும் மீட்டதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: கோயில் யானைகளின் கோபத்திற்கு காரணம் என்ன?
தொடர்ந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு யானைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தெய்வானை யானை மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதனை சாந்தப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. பெண் யானையான தெய்வானைக்கு மதம் பிடிப்பதற்கான வாய்ப்பு அரிது என்பதைக் குறிப்பிட்ட வனத்துறை அதிகாரிகள் , இந்த நிகழ்வுக்கு மதம் காரணம் அல்ல என உறுதி செய்தனர். விலங்குகளுக்கு ஏற்படும் சில குணநலன் மாற்றம் காரணமாக திடீரெனை ஆக்ரோஷமாக செயல்பட்டிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், தெய்வானை என பெயரிடப்பட்டுள்ள இந்த யானைக்கு சுமார் 28 வயது ஆகிறது. 2006ம் ஆண்டு இக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. 3 பேர் இந்த யானையின் பராமரிப்பாளர்களாக உள்ளனர். ராஜகோபுரம் அருகே தனி கொட்டகை அமைத்து இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
யானை பராமரிப்புச் செலவுக்காக மாதம் 75 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்கள் யாரும் தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை யானைக்கு வழங்க அனுமதி வழங்கப்படுவது இல்லை என கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை!