இதுதொடர்பாக, தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால், 26 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிக்கல்வி துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறைகளுடன் இணைந்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்வார். தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை.
தமிழ்நாட்டில் விரைவில் 7 ஆயிரத்து 700 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கவும், 80 ஆயிரம் வகுப்பறைகள் கரும்பலகைகள் இல்லாத வகுப்பறைகளாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தியளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் தொலைக்காட்சி வழியாக, கல்வி தங்குத் தடையின்றி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தொலைக்காட்சி வழியாக வகுப்புகளை ஒளிபரப்பு செய்து வரும் தொலைக்காட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உதவி எண் '14417' மூலம் மாணவர்களின் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் 7 ஆண்டுகள் என்பது மத்திய அரசின் முடிவு.
அதன் கால அளவு நீட்டிப்பதற்காக மத்திய அரசு அனுமதியை பெற வேண்டும். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது 7 ஆண்டுகள்தான். டிஆர்பி மற்றும் டெட் தேர்வு எழுதியவர்களுக்கு 7 ஆண்டுகள் முடிந்து விட்டது. அதற்கு மேல் அவகாசம் பெறவேண்டும் என்றால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதற்காக கடிதம் எழுத அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சரோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு எப்போது... கல்வித்துறைக்கு நீதிமன்றம் கேள்வி