தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பதிவுபெற்ற இரண்டாயிரத்து 135 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், ”கட்டடத் தொழிலாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிவாரணத் தொகையை, தமிழ்நாடு அரசு ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது.
கட்டுமானப் பணியில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முதல் கட்டமாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களான தலைக் கவசம், கண் கண்ணாடி, மேல் உறை, கையுறை, காலணி போன்றவை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி இன்று தருமபுரியில் இரண்டாயிரத்து 135 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்பால் நலிவடைந்த கட்டுமான தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்கு மேல், அவர்களின் வங்கிக்கணக்கில் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 15 வாரியங்களைச் சேர்ந்த 13 லட்சம் பேருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த கட்டுமான தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு, 25 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 385 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 3 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.